நாளை சீனா பயணமாகிறார் அமைச்சர் அலி சப்ரி

TubeTamil News
0

 சீன அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சனிக்கிழமை (24) சீனா பயணமாகின்றார்.



சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்கீழ் சனிக்கிழமை (24) சீனா செல்லும் அமைச்சர் அலி சப்ரி, எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அங்கு தங்கியிருப்பார். 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியுதவி செயற்திட்டத்தின்கீழ் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றான கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கவேண்டிய கடப்பாட்டுக்கு இலங்கை உள்ளாகியிருக்கின்றது.

அதன்படி கடன்மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர் நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவரும் நிலையில், அதனை முன்னிறுத்தி இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குழுவொன்றை உருவாக்கியுள்ளன. இதுஇவ்வாறிருக்க இலங்கையின் மிகமுக்கிய இருதரப்புக் கடன்வழங்குனரான சீனா பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் கண்காணிப்பாளராக பங்கெடுத்துவருகின்றது.

எனவே சீனாவில் எதிர்வரும் 25 - 28 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்குப் பயணமாகும் அமைச்சர் அலி சப்ரி, அங்கு முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் பலருடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

அதுமாத்திரமன்றி சீன அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தல் மற்றும் இருநாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top