தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அன்றாட பாவனைக்குக் கூட தண்ணீர் இன்றி மக்கள் அல்லல் படுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பலர் மண் கிணற்றை நம்பியே குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
தற்பொழுது கடும் வறட்சியின் காரணமாக கிணற்றில் தண்ணீர் வற்றிய நிலையில் காணப்படுவதால் சிலர் காலையில் கிணற்றில் ஊறிவரும் நீரை எடுத்து அதனை சுடுநீராகி குடிப்பதற்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
சிறுவர்களின் பாடசாலை சீருடைகள் உள்ளிட்டவற்றை கழுவுவதாயில் அயல் கிராமத்தில் சென்று அங்கிருந்து கொண்டு வரும் நீரினிலேயே பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடங்களில் ஏற்பட்ட வறட்சியின் பொழுது அயலில் உள்ள குளங்களில் சென்று குளிப்பதற்கு மற்றும் உடுபுடவைகள் கழுவுவதற்கு பயன்படுத்தியதாகவும், தற்பொழுது குளங்களிலும் நீர் இல்லாத காரணத்தினால் குளிப்பதற்கு கூட பெரும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பல வருட காலமாக பாதுகாப்பற்ற மண் கிணற்றை பயன்படுத்தி வருவதாகவும் இனி வரும் காலங்களிலாவது சுத்தமான குடிநீரை பெற்று நோயற்றவர்களாக வாழ்வதற்கு எமது பகுதிக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதேச செயலங்கள் ஊடாக பவுசர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டதாகவும், தற்பொழுது அந்த நிலையும் இல்லாது போய் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.