மெசாட்டை இறக்கிய இஸ்ரேல் பிரதமர்... ஹமாஸை குறிவைத்து மெகா பிளான்

keerthi
0





 இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டின் உளவுத் துறைக்குப் பரபர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


இஸ்ரேல் நாட்டில் கடந்த 1.5 மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. அதாவது முதலில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேல் சரமாரியாகப் பதிலடி கொடுத்து வருகிறது.


காசா பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், அதன் பிறகு படையெடுப்பையும் நடத்தி வருகிறது. காசா சுரங்கங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.


 இதற்கிடையே ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவுக்கு வெளியே இருந்தாலும் கூட அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.


மேலும் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மொசாட் அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளேன். இஸ்ரேல் நாட்டில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுக்கு உரியத் தண்டனை கிடைப்பது உறுதி" என்றார்.


அத்தோடு ஹமாஸ் அமைப்பைப் பொறுத்தவரை அங்கே ஒரு சிலர் தலைவர்கள் மட்டுமே காசாவில் வாழ்கிறார்கள். மற்ற அனைத்து உயர்மட்டத் தலைவர்களும் காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் தான் வாழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளான கத்தார் மற்றும் லெபனான் நாடுகளில் இந்த ஹமாஸ் தலைவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்களைக் குறிவைத்துத் தான் இப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.


பல ஆண்டுகளாகவே மொசாட் அமைப்பு வெளிநாடுகளில் வசித்து வரும் பாலஸ்தீனிய தலைவர்கள் மற்றும் ஈரானிய அணு ஆயுத விஞ்ஞானிகளைக் குறிவைத்து படுகொலை செய்வதாகக் குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் நெதன்யாகு வெளிப்படையாகவே இந்த உத்தரவைப் போட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


போர் நிறுத்தம்: இது ஒரு பக்கம் இருக்க இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அந்த போர் நிறுத்தம் அமலுக்கு வர சில நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சில தவிர்க்க முடியாத காரணங்களால் போர் நிறுத்தம் அமலுக்கு சில நாட்கள் வரை ஆகிறது" என்றார்.


அதேநேரம் இது தற்காலிக போர் நிறுத்தம் தான் என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது முடிந்ததும் மீண்டும் தாக்குதல் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.


எனினும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த விஷயத்தை மட்டும் அனைவருக்கும் நான் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த போர் முடிவுக்கு வரவில்லை. இது தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே. போர் இன்னும் தொடர்கிறது. வரும் காலத்திலும் தொடரும். எங்களை இலக்குகளை அழிக்கும் வரை இந்தப் போர் தொடரும்" என்று அவர் தெரிவித்தார். ஹமாஸிடம் இப்போது 240 பிணைய கைதிகள் இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போர் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top