கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு காரணமாக விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அதிகாரி நேற்று (18) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
களுத்துறை வலவ்வத்தை வீதியை சேர்ந்த 42 வயதுடைய வடுகே தமித் நிஷாந்த பெர்ணான்டோ என்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தெற்கு அதிவேக வீதியின் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பின்னதுவ உப பிரிவில் கடமையாற்றியவராவார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இமதுவ பகுதியில் பெய்த கனமழை காரணமாக இமதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு அதிவேக வீதியின் 101.4 R கம்பத்திற்கு அருகில் உள்ள மண்மேடு ஒன்று சரிந்து விழுந்தது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனர்த்தம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று, அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் வாகன விபத்து இடம்பெற்றதா என ஆராய்ந்த போது அதே இடத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால், பணியில் இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
