தமிழர்களின் உரிமை, தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரனுடன் இணைந்து செயற்படவுள்ளதாக
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தரன் சூளுரைத்துள்ளார். கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தரன்எம்பி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
இலங்கை தமிழரசு கட்சியின் வரலாற்றில் ஜனநாயக ரீதியான முறையில் தலைவர் தெரிவு இடம்பெற்றுள்ளது. இத்தெரிவு வரலாற்றில் முக்கிய தடம் பதித்துள்ளது. என்னுடன் போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன் சீ.யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியின் செயற்பாடுகளை பல வழிகளில் உயர்த்துவேன். எமது மக்களின் உரிமைக்காக, தேசிய இருப்புக்காக,தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம். என்னை தெரிவு செய்வதற்கு காரணமான இறைவனுக்கும் எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்தவர்களுக் கும் நன்றிகள்.எனது தெரிவு, பலபேருக்கு பல நம்பிக்கைகளை தந்துள்ளது. இளைஞர்கள் யுவதிகள் தற்போது புதிய அக்கறையுடன் செயற்படத் தொடங்கியுள்ளனர்.
நண்பர் சுமந்திரன் கூட பல தடவை தெளிவாக பல இடங்களில் சொல்லியிருந்தார். எங்களுடைய பங்கு என்பது இனம் சார்ந்தது. தமிழ் தேசியத்தினுடைய இருப்பு சார்ந்தது. எங்களுடைய இனத்துக்கான அடிப்படை உரிமைகள் சார்ந்தது. இந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் செயற்பட்டு பலப்படுவோம் என்றார்.