காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரிப்பு..!!

tubetamil
0

 ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் சிக்கியுள்ள காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையில், ஹமாஸுடன் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தமும் அதிகரித்து வருகிறது.

போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய சுற்று பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸ் நேற்று (13) எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்தார்.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் தலைவர் டேவிட் பார்னியும் கெய்ரோ செல்லவிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பதற்கான திட்டம் இன்றி ரபா நகர் மீது இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடுவது பற்றி அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே சி.ஐ.ஏ. தலைவரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.

ஏற்கனவே இஸ்ரேலின் தாக்குதல்களால் துரத்தப்பட்டு தற்போது எகிப்துடனான எல்லையில் உள்ள இந்த சிறு நகரில் அடைக்கலம் பெற்றிருக்கும் பலஸ்தீன அகதிகள் தொடர்ந்து அங்கிருந்து எங்கு செல்வது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“இங்கே குண்டு வீச்சுகள், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் நாம் எங்கே போவது” என்று ரபாவுக்கு இடம்பெயர்ந்து வந்திருக்கும் பலஸ்தீன பெண் ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றிருக்கும் ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லா நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். இதன்போது “ரபாவில் உள்ள பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பைடன் குறிப்பிட்டார்.

“வன்முறை இடம்பெறும் வடக்கில் இருந்து பல மக்களும் இடம்பெயர்ந்தும் பலமுறை இடம்பெயர்ந்தும் தற்போது ரபாவில் நிரம்பி உள்ளனர். அவர்கள் அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர்” என்று பைடன் குறிப்பிட்டார்.

நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் இறுதியான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழுத்தம் கொடுத்த மன்னர் அப்துல்லா, ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் “நிச்சயமாக மற்றொரு மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தும்” என்ற எச்சரித்தார்.

“ரபா பகுதியில் மேலும் தீவிரமான மனிதாபிமான நெருக்கடி ஒன்றை தடுக்கும் வகையில் முடியுமான விரைவில் இராணுவ நடவடிக்கையை நிறுத்தும்படி” இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது.

போர் நிறுத்தம் ஒன்றுக்காக கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பு முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்த இஸ்ரேல் ரபா நகர் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த திங்கட்கிழமை அந்த நகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதன்போது இரு பணயக்கைதிகளை விடுவித்ததாக இஸ்ரேல் கூறியது.

60 வயதான பெர்னாண்டோ சிமொ மர்மன் மற்றும் 70 வயதான லுவிஸ் ஹர் ஆகிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையை “சிறப்பானது” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் பாராட்டி இருப்பதோடு, டஜன் கணக்கான காசா மக்களின் உயிரிழப்புகள் ஒரு “படுகொலை” என்று பலஸ்தீன வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் இடையே இடம்பெற்ற உரையாடலுக்கு சில மணி நேரத்தின் பின்னரே இஸ்ரேலின் இந்த அரிதான பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்றது.

எனினும் தனது நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த நெதன்யாகு, ரபாவில் உள்ள போராளிகளின் கடைசி தளத்தை அகற்றமால் முழுமையான வெற்றியை அடைய முடியாது என்று வலியுறுத்தினார்.

“பாதுகாப்பான இடமில்லை”

காசாவில் முழுமையான போர் நிறுத்தம் ஒன்றை நிராகரிக்கும் அமெரிக்கா மீது மத்திய கிழக்கு கூட்டணி நாடுகள் கோபத்தை வெளியிட்டு வருகின்றன. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் இஸ்ரேல் திட்டத்திற்கு ஆதரவு வழங்கி வரும் அமெரிக்கா பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையிலான குறுகிய கால போர் நிறுத்தம் ஒன்றையே பரிந்துரைத்து வருகிறது. ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாக பைடன் நிர்வாகம் திங்கட்கிழமை கூறியபோதும் முக்கிய விடயங்களில் தொடர்ந்து இடைவெளி காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

காசாவின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்களின் கடைசி அடைக்கலமாக ரபா மாறியுள்ளது. அவர்கள் எகிப்து எல்லையில் கூடாரங்களை அமைத்து தங்கி இருப்பதோடு போதிய உணவு இன்றியும் நோய்கள் பரவும் அபாயத்துடனுமே இருந்து வருகின்றனர்.

இதில் சில குடும்பங்கள் ஏற்கனவே பல தடவைகள் இடம்பெயர்ந்த நிலையில் மீண்டும் ஒருமுறை இடம்பெயரும் வகையில் கூடாரங்களை அகற்றி தயாராகி வருகின்றனர்.

“நாம் வடக்கில் இருந்து வெறுக்கைகளுடன் தப்பி வந்தோம். பின்னர் கான் யூனிஸில் இருந்து வெறுங்கையோடு தப்பி வந்தோம்” என்று இஸ்மைல் ஜூன்தியா என்பவர் தெரிவித்தார். “மீண்டும் ஒரு முறை நாம் (இடம்பெயர்வதற்கு) தயாராக வேண்டி உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரபா நகரில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தப்படும் என்று நெதன்யாகு குறிப்பிட்டபோதும், வெளிநாட்டு அரசுகள், உதவிக் குழுக்கள் மற்றும் காசா மக்கள் எங்கே செல்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

“காசாவில் தற்போது பாதுகாப்பன எந்த இடமும் இல்லை” என்று ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஸ்டபனே டுஜரிக் தெரிவித்தார்.

காசாவுக்குள் இஸ்ரேலின் முழுமையான ஊடுருவல் அதிகப்படியான பொதுமக்களின் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க் எச்சரித்தார். அது காசாவுக்குச் செல்லும் மிகக் குறைவான உதவிகளையும் நிறுத்திவிடும் என்றும் அவர் கூறினார்.

ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வகைப்படுத்தலில் கடுமையான பட்டினி நிலையை எதிர்கொண்டிருக்கும் காசாவின் ஒட்டுமொத்த மக்களும் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

“வடக்கில் கிட்டத்தட்ட முழுமையாக மாவு தீர்ந்துவிட்டது” என்று வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் உள்ள ஆடவர் ஒருவர் குறிப்பிட்டார். “சிறுவர்களுக்குக் கூட உணவு மற்றும் பானங்களை பெற முடியாமல் இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

உயிரிழப்பு 28,473 ஆக உயர்வு

இஸ்ரேலின் வான், தரை மற்றும் கடல் வழியாக தாக்குதல்கள் காசாவில் தொடர்ந்தும் நீடித்து வருகிறது. நேற்று 130 ஆவது நாளாக இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசாவின் நுரைத் அகதி முகாமில் இருக்கும் வீடு ஒன்றின் மீது நேற்றுக் காலை இடம்பெற்ற வான் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

ரபாவில் உள்ள பிராசில் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டு குறைந்தது நால்வர் காயமடைந்துள்ளனர். ரபா நகரின் மேற்கு பகுதியில் கடுமையான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருப்போர் விபரித்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 28,473 ஆக அதிகரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று கூறியது. கொல்லப்பட்டவர்களில் 12,300க்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் சுமார் 8,400 பெண்கள் அடங்குகின்றனர்.

தவிர, 68,146க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் உயிர் ஆபத்தை எதிர்கொண்டு வரும் 11,000க்கும் அதிகமானவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவின் மருத்துவ கட்டமைப்பு முற்றாக சீர்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top