இவ்வருடம் ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
ரஷிய அரசியலில் தனக்கு போட்டியாளர்கள் உருவாகாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin).
புதினை தீவிரமாக விமர்சித்து வந்தவர், அலெக்சி நவால்னி (Alexei Navalny). ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் நவால்னி திகழ்ந்தார்.
அத்தோடு நவால்னி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 19 வருடங்களுக்கும் அதிகமான சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறுஇருக்கையில், சில தினங்களுக்கு முன், நவால்னி, சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் திடீரென உயிரிழந்தார்.
சிறை வளாகத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவசர மருத்துவ உதவியாளர்கள் விரைந்து வந்து அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு நல்ல மாற்றாக நவால்னியை கருதி வந்த அந்நாட்டு மக்களில் பலரும், உலகின் பல அரசியல் தலைவர்களும், நவால்னியின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும், அலெக்சி நவால்னியின் உடல் தற்போது வரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.