தென்னாபிரிக்காவில் பஸ் வண்டி ஒன்று பாலத்தில் இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நற்பத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிர் தப்பிய ஒரே ஒருவரான எட்டு வயது சிறுமி படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு லிம்போபோ மாகாணத்தில் நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற இந்த விபத்தில் தடுப்பையும் உடைத்துக் கொண்டு கீழே விழுந்த பஸ் வண்டி தீப்பிடித்துள்ளது. இதில் பொட்ஸ்வானா தலைநகர் கபொரோனில் இருந்து உயிர்த்த ஞாயிறு ஆராதனைக்காக மோரியோ நகருக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த பயணிகளே பஸ் வண்டியில் இருந்துள்ளனர்.
ஜொஹன்னஸ்பேர்க்கின் வடக்காக சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மொகோபான் மற்றும் மார்கன் இடையிலான மலையின் மீது உள்ள பாலம் ஒன்றில் பயணிக்கும் போதே இந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்திருப்பதாக தென்னாபிரிக்க வானொலி குறிப்பிட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் வியாழன் இரவு வரை இடம்பெற்றதோடு உயிரிழந்த சிலரது உடல்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சில சடலங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்துபோயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.