காசாவில் உணவுப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் தொடர்பில் சர்வதேச அளவில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் சூழலில் அங்கு 165 ஆவது நாளாகவும் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் கட்டாரில் முன்னெடுக்கப்பட்டபோதும், அது மிக மந்தமான வகையிலேயே இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆறாவது முறையாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் மீண்டும் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். காசாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் போர் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் முறுகல் அதிகரித்து வரும் சூழலிலேயே பிளிங்கனின் விஜயம் இடம்பெறுகிறது.
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிளிங்கன் சவூதி அரேபியா மற்றும் எகிப்து பயணித்து, அந்நாட்டு தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று குறிப்பிட்டது.
இந்நிலையில் காசாவின் ஒட்டுமொத்த மக்களும் “கடுமையான உணவு பாதுகாப்பின்மை” நிலையை அனுபவித்து வருவதாக பிளிங்கன் நேற்று (19) குறிப்பிட்டிருந்தார். அந்த பலஸ்தீன பகுதிக்கு மனிதாபிமான உதவி விநியோகத்தை அதிகரிக்கவும் அவர் வலியுறுத்தினார். பிலிப்பைன்ஸ் சென்ற அவர் அங்கு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடுமையான பட்டினி நிலையை எதிர்கொண்டிருப்பதாக ஐ.நா. ஆதரவுடைய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவில் உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமானதாகவும், பரந்ததாகவும் மாறியுள்ளதோடு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் போக்கு செங்குத்தாக அதிகரித்து வருகிறது.
மக்கள் விலங்குணவுகளை உண்பது, குப்பைகளில் உணவு தேடுவது அல்லது பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது தொடக்கம் மே மாதத்திற்கு இடையே எந்த ஒரு நேரத்திலும் வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முற்றுகையில் உள்ள காசாவுக்கு தடையற்ற வகையில் உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை கேட்டிருக்கும் ஐ.நா. மனிதாபிமான உதவிகளுக்கான தலைவர் மார்டின் கிரிபித்ஸ், இழப்பதற்கு நேரம் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
காசாவுக்காக உதவி விநியோகத்தை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருவதோடு அமெரிக்கா உட்பட பல நாடுகள் வானில் இருந்து அங்கு உதவிகளை போட்டும், தொண்டு நிறுவனம் ஒன்று கடல் வழியாக உதவி விநியோகத்தை ஆரம்பித்தபோதும் போதுமாக உதவிகள் கிடைப்பதில்லை என்று தொண்டு நிறுவனங்கள் கூறி வருகின்றன. குறிப்பாக வடக்கு காசாவில் நிலைமை மோசமடைந்துள்ளது.
காசாவில் உதவிகளை அதிகரிப்பது மற்றும் இஸ்ரேல் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வரும் ரபா பகுதி தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் (18) தொலைபேசியில் அழைத்து பேசியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து சர்வதேச எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இஸ்ரேல் உறுதியாகக் கூறி வருகிறது.
“ரபாவுக்குள் நுழைந்தால் நாம் எங்கே போவது? எங்கிருந்து கூடாரங்கள், போர்வைகள் மற்றும் படுக்கைகளை பெறுவது?” என்று ரபாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் 50 வயது சபாஹ் அல் அஸ்தால் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
எனினும் ரபாவில் உள்ள இரு வீடுகள் மற்றும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள உதவி களஞ்சியம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு ஷெய்க் ரத்வான் பகுதியில் உள்ள அல் அமூதி குடும்ப வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93 பேர் கொல்லப்பட்டு 142 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,819 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 73,934 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா வளாகத்தை சுற்றிவளைத்த இஸ்ரேலிய படைகள் அதன் முற்றவெளி பகுதியை தரைமட்டமாக்கி கடுமையான தேடுதலில் ஈடுபட்ட பின் நேற்று அங்கிருந்து வாபஸ் பெற்றுள்ளன. இதன்போது மருத்துவமனையில் இருந்து சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இதில் ஹமாஸ் தளபதி பாயித் அல் மபூ உட்பட 20 ஹமாஸ் போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. எனினும் அவர் காசாவுக்கான உதவிகளை பாதுகாப்பதற்கு பொறுப்பான பலஸ்தீன பொலிஸ் அதிகாரி என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
எனினும் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் கடுமையான வான் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதில் அல் ஷிபா மருத்துவமனையின் வடக்கு வாயிலில் உள்ள இரு கட்டடங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
ஹமாஸுடனான மறைமுக பேச்சுவார்த்தைக்காக கட்டார் சென்றிருக்கும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் இரண்டாவது நாளாக நேற்று (19) போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர். இஸ்ரேல் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கும் ஹமாஸ் அமைப்பு நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும் முயற்சித்து வரும் சூழலில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பெரும் இடைவெளி நீடித்து வருகிறது.
தற்போதைய பேச்சுவார்த்தைக்கு இரண்டு வாரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என்று இஸ்ரேலிய பிரதிநிதிகள் கணித்துள்ளனர். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற போர் நிறுத்த உடன்படிக்கை ஒரு வாரம் மாத்திரமே நீடித்தமை குறிப்பிடத்தக்கது.