போர் நிறுத்த முயற்சிகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் முற்றுகைக்கு மத்தியில் காசாவில் நேற்று (11) புனித ரமழான் ஆரம்பமானதோடு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே இம்முறை நோன்பு ஆரம்பமாகியுள்ளது.
ரமழான் மாதத்திற்கு முன்னர் ஆறு வாரங்கள் கொண்ட போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சிகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் முன்னெடுக்கப்பட்டபோதும் அவை வெற்றி அளிக்கவில்லை. இதற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ரமழானுக்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்; தொடர்ந்து நீடித்தது. காசா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இடம்பெற்ற வான் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். அபூ ஷமலாவுக்கு சொந்தமான வீட்டின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் பெண்களே கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
மறுபுறம் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகரில் இடம்பெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் மேலும் மூவர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு காசா நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்ட அஷூர் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் இருந்து சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 106 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 31,112 ஆக அதிகரித்திப்பதோடு மேலும் 72,760 பேர் காயமடைந்துள்ளனர்.
‘ஐந்து மாதமாக நோன்பு’
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் கடுமையான கெடுபிடிக்கு மத்தியிலும் காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் பட்டினிக்கு மத்தியிலும் பலஸ்தீனர்கள் நேற்று புனித ரமழான் மாதத்தை ஆரம்பித்தனர்.
ஜெரூசலத்தில் உள்ள பழைய நகரின் குறுகலான வீதிகளில் ஆயிரக்கணக்கான பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான அல் அக்ஸா பள்ளிவாசலில் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்தப் பள்ளிவாசலுக்கு ரமழான் மாதத்தில் கட்டுப்பாடு விதிப்பது பற்றி எச்சரித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு அளவு எண்ணிக்கையான வழிபாட்டாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார்.
‘இது எமது பள்ளிவாசல் என்பதோடு நாம் அதனை பாதுகாக்க வேண்டும்’ என்று ஜெரூசலம் வக்ப் சபை பணிப்பாளர் நாயகம் அஸாத் அல் காதிப் தெரிவித்தார். ‘அமைதியாகவும் பாதுகாப்பாகவும் பெரும் எண்ணிக்கையானவர்கள் நுழைய முடியுமாக இந்த பள்ளிவாசலில் முஸ்லிம்களின் இருப்பை நாம் பாதுகாக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கமான ரமழானை வரவேற்பதற்கு பழைய நகரில் அலங்காரங்கள் செய்யப்படுகின்றபோதும் இம்முறை அவை காணப்படவில்லை. காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகள் அல்லது குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் சுமார் 400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் தெற்கு நகரான ரபாவின் பிளாஸ்டிக் கூடாரங்களில் சுருக்கப்பட்டு உணவுப் பற்றாக்குறை மற்றும் பட்டினிக்கு மத்தியிலேயே இம்முறை ரமழான் ஆரம்பமாகியுள்ளது.
‘நாம் ஐந்து மாதங்களாக நோன்பு இருப்பதால் ரமழானை வரவேற்பதற்கு எந்த தயார்படுத்தலையும் செய்யவில்லை’ என்று ஐந்து வயது குழந்தையின் தாயான மாஹா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இங்கே உணவு இல்லை, சில பொதியிடப்பட்ட உணவுகளே இருப்பதோடு அரிசி மற்றும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் நம்ப முடியாத அதிக விலையில் விற்கப்படுகின்றன’ என்று ரபாவில் இருந்து சாட் செயலி வழியாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்தார்.
இம்முறை ரமழான் மாதம் வலி நிறைந்த தருணத்தில் வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது ரமழான் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடூரமான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், பாதுகாப்பான மனிதாபிமான மற்றும் நிவாரண வழித்தடங்களை நிறுவுவதும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும் என்று சவூதி அரேபிய மன்னர் சல்மான் வெளியிட்ட ரமழான் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா தலைவர் தனது ரமழான் செய்தியில், காசாவில் பயங்கரத்தை சந்தித்துள்ள அனைவருக்கு ஆதரவு மற்றும் ஒருமைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் காசாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிய கப்பல் ஒன்று புறப்படுவதற்கு தயாராக தொடர்ந்து சைப்ரஸில் காத்துள்ளது. ஓபன் ஆம்ஸ் என்ற இந்தக் கப்பல் அதே பெயருடைய ஸ்பெயின் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
200 தொன் உணவுப் பொருட்களை ஏற்றிய இந்தக் கப்பல் புறப்பட்டு இரண்டு நாட்களில் காசாவில் குறிப்பிடப்படாத கடற்கரை பகுதியை அடைய திட்டமிட்டுள்ளது. மறுபுறம் உதவி விநியோகத்திற்காக காசா காரையில் தற்காலி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான பணியை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.
காசாவில் பட்டினிச்சாவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அங்கு பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தப் பேச்சு
ரமழான் மாதத்தை அமைதியாக கழிப்பது மற்றும் காசாவில் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவித்து அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருந்து பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை எட்டும் பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி ஸ்தம்பித்துள்ளது.
மேலும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டபோதும் அதற்கான திகதி மற்றும் விபரங்கள் வெளியாகவில்லை.
தற்போது கட்டாரில் வசித்து வரும் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே வெளியிட்ட தொலைக்காட்சி உரை ஒன்றில் கூறியிருப்பதாவது, ‘உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியாததற்கான பொறுப்பு ஆக்கிரமிப்பாளர் (இஸ்ரேல்) உடையது என்பதை நான் தெளிவாகக் கூறிகொள்கிறேன். எவ்வாறாயினும் நாம் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்வோம்’ என்றார்.
இந்நிலையில் ரமழானின் முதல் பாதியில், குறிப்பாக முதல் பத்து நாட்களுக்குள் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு இராஜதந்திர அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.