வெடுக்குநாறி மலையில் கோயில்கள் கிடையாது! விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

keerthi
0

 


வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற சிவாராத்திரி வழிபாடுகளின் போது குழப்பங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த இடத்தில் கோயில்கள் ஏதும் கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இன்றைய (21) நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் கூறியுள்ளார்.

இதன் போது மேலும் உரையாற்றிய அவர், “நாடாளுமன்ற விவாதத்தின் போது வெடுக்குநாறிமலை பற்றி பேசப்பட்டது.

கோயிலுக்கு சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதாவது வெடுக்குநாறி மலையில் எந்த கோயில்களும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன்.

இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்கு சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

பௌத்த மத மரபுரிமைகள் உள்ள பகுதியில் பிறிதொரு தரப்பினர் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்கும் போது முரண்பாடுகளே தோற்றம் பெறும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த மலையில் சட்டவிரோதமான முறையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

எனினும்    இதனை தொடர்ந்து, கடந்த 4 ஆம் திகதி மதிமுகராசா என்ற பூசகர் வெடுக்குநாறி மலையில் பூஜை வழிபாட்டில் ஈடுபட வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று 400 பேர் வரை இந்த மலைக்கு சென்றுள்ளார்கள்.

மாலை 6 மணி வரை மலையில் இருக்க முடியும், 6 மணிக்கு பின்னர் அங்கு எவரும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்த நிலையில், சுமார் 40 பேர் இரவு 8 மணிவரை அங்கு இருந்துள்ளார்கள்.

வெடுக்குநாறிமாலையில் இரவு 8 மணிவரை தங்யிருந்தவர்கள் அடுப்பு பற்ற வைத்து சட்டவிரோதமான முறையில் செயற்பட முற்படுகையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு காவல்துறையினரை அறிவுறுத்தியது. 

இதன் பின்னரே 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பௌத்த மரபுரிமைகள் உள்ள இடங்களுக்கு சென்று முறையற்ற வகையில் செயற்பட்டால் பிரச்சினைகளே தீவிரமடையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. சட்டவிரோதமான முறையில் எவர் செயற்பட்டாலும் கைதுகள் இடம்பெறும்.

அத்தோடு    இந்து கோயில்களுக்கு சென்று பிற மதத்தவர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டால் அவர்களையும் நாங்கள் கைது செய்வோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைபட்சமாக கருத்து தெரிவிப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top