பாரதிபுரம், அறிவியல், மலையாளபுரம், கிருஸ்ணபுரத்தை மையப்படுத்தி தபாலகம் அமைக்க பிரதேச மக்கள் கோரிக்கை..!!

tubetamil
0

 பாரதிபுரம், அறிவியல், மலையாளபுரம், கிருஸ்ணபுரத்தை மையப்படுத்தி தபாலகம் அமைக்க பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மேற்குறித்த பிரதேச மக்களால் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் நீண்ட காலமாக இக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். சுமார் 4500க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ள மேற்குறித்த கிராமங்கள் தபால் சேவையை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.


அறிவியல்நகர் பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், மத்திய வங்கியின் வடமாகாண பிராந்திய அலுவலகம், தெங்கு அபிவிருத்தி சபையின் வட மாகாண அலுவலகம், வனலாகா திணைக்களம், ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட முக்கிய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அமைந்துள்ளது.

அத்துடன், மேற்குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களும் தபால் சேவையை பெற்றுக்கொள்வதற்கு அதிகமாக கிளிநொச்சி தபாலகத்தை அணுக வேண்டி உள்ளது.

இதற்காக போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாக காணப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

முதியோர் கொடுப்பனவு, அரச மாதாந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி தபாலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளதாக தெரிவிக்கும் மக்கள், சில சமயங்களில் பணத்தை பெற்றுக் கொள்ள முடியாமல் திரும்பும் நிலையும் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மின்கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு வங்கி சேவையை பெறுவதானாலும், கிளிநொச்சிக்கு செல்லவேண்டி உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

A9 வீதிக்கு சிரமத்தின் மத்தியில் சென்று 50 ரூபா செலுத்தி பேருந்தில் பயணித்து சேவையை பெற வேண்டி உள்ளமையால், வீண் செலவு ஏற்படுவதாக தெரிவிக்கும் மக்கள், அவ்வாறு சென்றும் அரச கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பும் நிலையும் தமக்கு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தமது பிரதேசத்தை மையப்படுத்தி தபாலகம் ஒன்றை அமைத்து தருவதன் ஊடாக, தாம் சிரமங்களை எதிர்கொள்வதை தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

முறிகண்டி மற்றும் அம்பாள்நகர் பகுதிகளில் உப அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் இலங்கை வங்கியும் இருக்கின்ற போதிலும், அங்கு சென்று சேவைகளை பெறுவதைவிட கிளிநொச்சி பகுதிக்கு செல்வது இலகுவாக அமைகின்றது.

கல்வி, பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்து வரும் எமது கிராமங்களை முன்னேற்ற பாதைக்குள் அழைத்து செல்லும் வகையிலும், தபால் திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வகையிலும் சர்மந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவம் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தமது பிரதேசங்களை மையப்படுத்தி தபால் திணைக்களம் அல்லது வங்கி கிளைகளை நிறுவுவதன் ஊடாக, குழுச் சேமிப்பு, மின்கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முதியோர் கொடுப்பனவு, சிறுநீர் பாதிப்பு மற்றும் அரச கொடுப்பனவுகளை கிளிநொச்சி சென்று பெற்றுக்கொள்ளும் நிலையிலிருந்து, அருகில் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உரிய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குறித்த பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குறித்த பிரதேச மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு சென்று தபால் மற்றும் வங்கி சேவைகளை பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top