கொழும்பின் புறநகர் பகுதியான கொஹுவளையில் இரண்டு மாடி வீடொன்றுக்கு முன்னால் தீ காயங்களுக்குள்ளான நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
எலன் என்ற 71 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் விழுந்து கிடந்த இடத்தில் மண்ணென்னை வாசனை அடங்கிய போத்தல்கள் மற்றும் தீப்பெட்டிகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் கடந்த மூன்று மாதங்களாக வீட்டின் அறையில் தற்காலிகமாக தங்கியிருந்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நபர் உறுதியளித்தபடி அறைக்கான 10000 ரூபாய் தொகையை செலுத்தாததால் 69 வயதான வீட்டின் உரிமையாளரான பெண்> வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், குறித்த பெண்ணுக்கு அவ்வப்போது தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, தொடர்பை பேண அவர் முற்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கொஹுவல கடவத்தை வீதியிலுள்ள குறித்த பெண்ணின் வர்த்தக நிலையத்திற்கு பல போத்தல்கள் அடங்கிய பையுடன் வந்த நபர் வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை என்றால் அவரை கொன்றுவிட்டு தானும் உயிரிழந்து விடுவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டின் உரிமையாளரான பெண் பொலிஸில் முறைப்பாடு செய்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வீட்டுக்குச் சென்ற போது குறித்த நபர் வீட்டு வாசலில் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கஸ்கிஸ்ச பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.