அண்மையில் மலையகத்தில் நடைபெற்ற இரு ஜனாதிபதி வேட்பாளர்களின் அரசியல் பிரசாரக் கூட்டங்களின் போது தோட்டத் தொழிலாளர்களில் சிலருக்கு மதுபான போத்தல்களை விநியோகித்தமையானது தேர்தல் சட்டத்தை பாரியளவில் மீறும் செயல் என்று சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது தமது ஊழியர்களுக்கு இலவசமாக மதுபான போத்தல்கள் வழங்கப்படுவதாக தோட்டத்துறை அதிகாரிகளிடம் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, விநியோகிக்கப்பட்ட மதுபானம் தரம் குறைந்ததாக இருந்ததாகவும், இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சுகாதார கேடு ஏற்படுவதாகவும் முறைப்பாடு செய்தவர்கள் கூறியுள்ளனர்.
அது மாத்திரமன்றி, இந்த சம்பவத்திற்கு பிறகு பணிக்கு சமுகம் அளித்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.