நாடு என்ற ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பியகம பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்துவோம். தேசிய உற்பத்தியாளர்கள், முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவோம். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவோம்.
தொழிலின்மை பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளின் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்துவோம். அதற்கான திட்டங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிப்போம்.
தேசிய மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்போம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி பொய்யுரைக்க வேண்டிய தேவை கிடையாது.
முடிந்ததை முடியும் என்போம், முடியாததை முடியாது என்போம். வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன. நாடு என்ற ரீதியில் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுத்தால் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அப்போது அரசியல்வாதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் போகும்.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஒருமித்த தன்மையில் உள்ளன. அதிகார பகிர்வு, தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தல், இறக்குமதி பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை நாங்கள் வகுக்க போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.