முன்னாள் போராளிகள் 3000 பேருக்கு வேலை உள்ளிட்ட 5 கோரிக்கை முன்வைத்தே ரணிலுக்கு ஆதரவு தெரிவித்ததாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராஜ் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தமையை வெளிப்படுத்தும் மாநாடு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மாநாடு இன்று பகல் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த மாநாட்டில் வடக்கு, கிழக்கிலிருந்து பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் இன்பராஜ் தெரிவிக்கையில்,
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினராகிய நாங்கள் எந்தவொரு டீலுக்கும் சென்று ஆதரவு தெரிவிக்கவில்லை.
டீல் பேசுபவர்கள் நாங்கள் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே டீல் பேசுவார்கள். நாங்கள் விடுதலைப்புலிகள். நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமந்திரன் மூலம் உடைக்கப்பட்டது. இன்று தமிழரசுக் கட்சியும் உடைந்துவிட்டது. தமிழருக்காக பேசக்கூடிய கட்சியாக இன்று யாரும் இல்லை.
கோழிக்குஞ்சு, பூனைக்குஞ்சு தருவதாக சங்கு தரப்பு மக்களை கூப்பிகிறார்கள். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இன்று மக்களை ஏமாற்ற போட்டியிடுகிறார்.
உங்கள் வாக்குகளை தமது சுயநலத்துக்காக பேரம் பேச இவ்வாறு செயற்படுகின்றனர். இந்த உண்மையை மக்கள் அறிய வேண்டும்.
எமது கட்சிக்காக கனடாவில் உண்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு ரூபா கூட எமக்கு தரப்படவில்லை. இன்று அந்த உண்டியல் சேகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். எமக்கு எந்த வகையிலும் உதவாத அந்த தரப்பு புலம்பெயர் மக்களிடம் ஏமாற்றி தாங்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.
இன்று, மக்களால் நிராகரிக்கப்பட்ட சங்கு வேட்பாளருக்காக கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் நிதி திரட்டப்படுகிறது. அவ்வாறு பலர் தமக்கு உழைப்பினை மேற்கொள்கின்றனர்.
நாங்கள் போராளிகளாக பல களம் கண்டவர்கள். இந்த நிலையில் எமது புனர்வாழ்வளிக்கப்பட்ட 3000 போராளிகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தே ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் ஆதரித்தோம்.
எமக்குள் வேறு டீல்கள் ஏதும் இல்லை. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் எமக்கு ஓர் அரசியல் கட்சி தேவைப்பட்டது. நாம் கட்சியை ஆரம்பித்திராவிட்டால் பிள்ளையானே யுத்த குற்ற விசாரணை நடந்தால் சென்றிருப்பார்.
அவர் சென்றிருந்தால் சர்வதேச விசாரணை நடந்தால் எவ்வாறு சாட்சியமளித்திருப்பார் என்பதை நினைத்துப் பாருங்கள். அதனால்தான் நாங்கள் அரசியல் கட்சி மூலம் பிரவேசித்தோம்.
எமது போராளிகளை ஒன்றாக சேர்க்க கூட்டமைப்பினர் தடுக்கின்றனர். அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதர், சிறிதரன் உள்ளிட்டவர்கள் இவ்வாறு தடுக்கின்றனர்.
நாங்கள் தடுப்பு முகாம்களிலும், புனர்வாழ்வு முகாம்களிலும் இருக்கும் போது தமிழ்ச் செல்வனின் மனைவியை பார்ப்பதற்கு கருணா வந்தார். நிறைய வாகனங்கள் வந்தது. நாங்கள் மாடியில் இருந்து பார்த்தேரம்.
எங்களை யாரும் பார்க்க வரவில்லை. உணவு தவிர வேறு எவையும் எமக்கு அங்கு கிடைக்கவில்லை. தலைக்கு வைக்கும் எண்ணெய் முதல் அனைத்தையும் எமது குடும்ப உறவுகளே கொண்டு வந்து தந்தார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எம்மை திரும்பியும் பார்க்கவில்லை. தாங்கள் தங்கள் சுயநலத்தை மட்டுமே எண்ணினார்கள்.
நாங்கள் போராளிகளாக இருந்த போது பயத்தில் இருந்தார்கள். போராட்டம் முடிந்த பின்னர் தங்கள் நரிக்குணத்தை காட்டினர். எம்மைப் பார்த்து சிரித்தார்கள். இவ்வாறு நரிகளாக இருந்தவர்களே இன்றும் மக்களை ஏமாற்றுகின்றார்கள்.
எமது தலைவர் ரணிலுடன் பேச முன்வந்தார். அவருடன் இணைந்து எமது போராளிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விடயங்களை நாங்கள் பெற்றுக் கொடுப்பதில் என்ன தவறு?
அதனால்தான் நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவை கோரிக்கையை முன்வைத்து ஆதரிக்கின்றோம். எமது நிலைப்பாட்டை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்தும் ஏமாற்றுபவர்களை அப்புறப்படுத்தி எம்மை ஆதரிக்க மக்கள் முன்வர வேண்டும். இந்த ே தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக் போட்டியிடும் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து, உங்களுக்காக போடிய எமது போராளிகளுக்கும், மக்களுக்கும் கிடைக்க வேண்டிய அபிவிருத்திகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.