மறைந்த சம்மந்தன் ஐயா உயிரோடு இருக்கும்போது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க வேண்டும் என பாடுபட்டவர் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற கட்சியின் காரியாலய திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மாற்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளிப்படுத்தப்படும்.
உண்மையான சிவில் நிருவாகம் நடைபெறுவதற்காக மட்டக்களப்பு மக்களும் அந்த மாற்றத்திற்காக ஒன்றிணைய வேண்டும். கடந்த அரசாங்கத்தில் சரியான நிருவாகம் நடைபெறவில்லை.ஜனாதிபதி வேட்பாளர் இன மத வேறுபாடுகள் இன்றி சகலரையும் மத்தித்து நடந்து கொள்ளக்கூடிய ஒருவராக காணப்படுகின்றார்.
தமிழ் மக்களை அவர் அதிகம் நேசிக்கின்றார். அவரிடம் சரியான திட்டத்தை வழங்கினால் தமிழ் மக்கள் முறையாக பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் நான் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளேன்.ஏனைய அரசியல் தலைவர்களைப் போல் ஏமாற்றாமல் அது நடைபெறும் நிட்சயமாக நடைபெறும் என நினைக்கின்றேன்” என்றார்.