இலங்கை ஒரு வரலாற்று கட்டத்தில் உள்ளதாக 'த காடியன்' தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் வெறும் 3.8 வீத வாக்குகளைப் பெற்ற அநுரகுமார திசாநாயக்க இந்த வாரம் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) என்ற மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த அநுரகுமார, தேசிய மக்கள் சக்திக்கும் தலைமை தாங்குகிறார்.
1970களின் முற்பகுதியிலும் 1980களின் பிற்பகுதியிலும் ஜே.வி.பி இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. இதன்போது, பாரிய வன்முறைகள் ஜே.வி.பி மற்றும் அப்போதைய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், புரட்சிகர மார்க்சிச - லெனினிசம் மற்றும் சிங்கள இன - தேசியவாதம் ஆகியவற்றின் கலவையிலிருந்து ஜேவிபி கட்சி வெகுதூரம் வந்து, மையவாத பிரதான நீரோட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
நாட்டின் தெற்கே கிராமப்புறங்களில் அதன் வேர்களில் இருந்து, கட்சி புறநகர் மற்றும் சிறிய நகரங்களில் அதன் தளத்தை மீண்டும் உருவாக்கியது. அத்துடன் ஊழலின் பிரச்சினையை கையில் எடுத்து நடுத்தர வர்க்கத்தை கூட கவர்ந்தது.
அதேநேரம், அரசியல் காற்று தம் பக்கம் திரும்பும் வரை பொறுமையாகக் காத்திருந்தால், அரச அதிகாரத்தை இன்று கைப்பற்றியுள்ளது. எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்கள் அந்த அரசாங்கத்துக்கு சவாலாகவே உள்ளன.
கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதைக் கூட கருத்தில் கொள்ளவில்லை. மாறாக உலக வல்லரசுகளுக்கு முன்னால் துவண்டு போவதற்கு அது மிகவும் தயாராக இருந்தது மற்றும் மேற்கத்திய நிறுவனங்களின் வரையறைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு இணங்க பொருளாதாரத்தை இயக்கியது.
இந்த பொருளாதாரக் கொள்கைகள் நாட்டில் உள்ள உயரடுக்கினருக்கு பயனளித்தன. அதே நேரத்தில், வெட் வரி உயர்வு, எரிசக்தி சந்தை விலை நிர்ணயம், பலரின் உண்மையான ஊதியங்களை பாதியாகக் குறைத்தல் மற்றும் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பு ஆகியவை உழைக்கும் மக்களைத் தாக்கியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை திருப்திப்படுத்த, பெரிய ஹெட்ஜ் நிதிகள் மற்றும் பிற நிதியாளர்களைக் கொண்ட சர்வதேச பத்திரதாரர்களால் தூண்டப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக, ஆடைத் தொழிலாளர்கள் மற்றும் தேயிலை பறிப்பவர்கள் போன்ற உழைக்கும் மக்களின் ஓய்வூதிய நிதி அடுத்த 16 ஆண்டுகளில் பாதி மதிப்பை இழக்கப் போகிறது.
எனினும், நிதித்துறையில் பணக்கார முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகள் கை வைக்கப்படாத நிலையில், நன்மைப் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், அநுரகுமார திஸாநாயக்கவின் முன் உள்ள முக்கிய சவால், சர்வதேச நாணய நிதியத்துடன் சிறந்த உடன்படிக்கையைப் பெறுவதாகும் என்று 'காடியன்' குறிப்பிட்டுள்ளது.
எனவே, அடுத்து வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் மாற்றங்கள் வரக்கூடும். இதற்கிடையில் இலங்கை இன்னும் ஏழு வாரங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்கிறது.
இதன்போது, அநுரகுமார திஸாநாயக்கவின் நாடாளுமன்ற பலம் மற்றும் அவர் உருவாக்கக்கூடிய தேசிய கருத்தொற்றுமை ஆகியவையே, சர்வதேச நாணய நிதியத்துடன் அவரது பேரம் பேசும் சக்தியை தீர்மானிக்கும் என்றும் 'காடியன்' குறிப்பிட்டுள்ளது.