கிளிநொச்சியில் இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் நேற்றிரவு வேகக் கட்டுப்பட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய சகோதரன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த வைகுந்தவாசன் குமணன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மற்றுமொரு வீதி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சியிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றுக்குள் விழுந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது சந்திரசேகரம் புவனேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இரு சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.