ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையின் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வின் போது இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை கடந்த காலத்திலிருந்து விலகி புதிய போக்கை வகுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையின் நிலைமைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனமும் ஆதரவும் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கைக்கான ஊடாடும் உரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கை இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நெருங்குகிறது.
இந்தநிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த தேவையான உறுதியான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள், எதிர்வரும் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், அதற்குப் பின்னரும், கருத்துச் சுதந்திரம், சங்கம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்று உயர்ஸ்தானிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச சமூகம் இந்த மாற்றத்தை ஆதரிக்க வேண்டும். இலங்கைக்கு கடன் வழங்குனர்கள், தமது செயற்பாட்டின்போது நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளையும் கவனத்திற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் புதிய அல்லது முன்மொழியப்பட்ட சட்டங்கள், குடிமக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் மீது ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.