வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்தவுடன் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலதா மாளிகையில் உள்ள பல முக்கிய இடங்களில் இந்த ஜோடி புகைப்படங்களை எடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
ஸ்ரீ தலதா மாளிகை போன்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க ஓவியங்களைக் கொண்ட பௌத்த விகாரைகளில் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கப் பயன்படுத்தப்படும் ஒளியினால் ஓவியங்கள் சேதமடைவதாகவும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி சமரசிங்க தெரிவித்துள்ளார்
தொல்லியல் நோக்கங்களுக்காக இவ்வாறான இடங்களில் புகைப்படம் எடுக்கும்போது, ஒளியைக் குறைக்க பிரத்யேக கமெராக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இல்லையெனில் இயற்கைப் பொருட்களால் வரையப்பட்ட படங்களுக்கு ஏற்படும் சேதம் மிகப் பெரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுப்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் செயற்பட முடியும் எனவும் அதன் பிரகாரம் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மேலதிக நடவடிக்கை எடுப்பார் எனவும் பேராசிரியர் காமினி சமரசிங்க தெரிவித்துள்ளார்.