தேர்தல் குறித்து யாழ். பல்கலை சமூகம் விடுத்துள்ள கோரிக்கை...!

tubetamil
0

 திர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமிழ் மக்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த கோரிக்கை அடங்கிய மடல் ஒன்று பல்கலைக்கழக மாணவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள - பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது.


தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது.

தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.

இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் இலங்கையின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர்.


இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும்.

தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம்.

மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top