தாம் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட்டதாக நல்லவர்கள் போல ஜே.வி.பி நடித்தாலும் இன்னும் பழைய போக்குடனே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தொிவித்துள்ளாா்.
பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஜனநாயக வழிக்கு வருவதாக அறிவித்த ஜே.வி.பி, 1988ஆம் ஆண்டு தேர்தலின் போது, தேர்தலில் போட்டியிடுவது மரண தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது.தேர்தல் கடமை மேற்கொண்டால் அதற்கான தண்டனை, மரணம் என மாவட்ட செயலாளர்கள் எச்சரித்திருந்தனர். மற்றும் வாக்களிப்போருக்கு மரணம் பரிசளிக்கப்படும் என்று பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
ஜே.வி.பிக்கு எதிராக பல்கலைக்கழக தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த மாணவர்கள் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டனர். அன்று ஜே.வி.பியின் வன்முறைக்கு முகங்கொடுத்த ரணில் விக்ரமசிங்க, சட்டம் ஒழுங்கை பேண முக்கிய பங்காற்றினார்.இன்றும் அந்த நிலைமை தான் ஜே.வி.பியில் உள்ளது. இவற்றையெல்லாம் மறைத்து நல்லவர்கள் போல நடிக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.