ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆகியன இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
கல்வி அமைச்சு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, விசாரணைகள் நிறைவடைந்தவுடன் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் சில வினாக்களுடன் கூடிய மாதிரி வினாத்தாள் அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரினால் வெளியிடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன், வெளியிடப்பட்டதாக கூறப்படும் 03 வினாக்கனை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் கடந்த 17ஆம் திகதி தீர்மானித்தது.
இந்நிலையில், நேற்று காலை பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர்கள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் பிரிவை வரவழைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அது மாத்திரமின்றி, ஆறு பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்ட நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவது அவசியமானால் நடத்தப்படும் என தெரிவித்தார்.