2019ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கு கடலில் 196 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டு விடுவிக்கப்பட்ட மூன்று பேரை மீண்டும் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் அமர்வு வழங்கிய விடுதலையை இரத்து செய்யக் கோரி, சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட, சிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஐவர் அடங்கிய அமர்வின் முன் இது தொடர்பான மனு பரிசீலிக்கப்பட்டுள்ளது
விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் ஆயிசா ஜினசேன, பிரதிவாதிகள் மூவரும் தலைமறைவாகி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.