2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பேலியகொடவில் உள்ள மெனிங் சந்தையில் மக்கள் பீதியுடன் கொள்வனவில் ஈடுபட்டமையை காணமுடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் நேற்று காலை வேளையில் மரக்கறிகளை கொள்வனவு செய்த மக்கள் மத்தியில் பீதி நிலை ஏற்பட்டிருந்ததாகவும், பிற்பகல் வேளையில் நிலைமை சீரடைந்ததாகவும் மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்ற அச்சம் காரணமாகவே மக்கள் அத்தியாவசிய காய்கறிகளை கொள்வனவு செய்யும் நிலைமையை தாம் அவதானித்ததாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், செப்டெம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டமையும் இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றையதினம் பீதியுடனான கொள்வனவு நிலைமை நிலவினாலும், காய்கறிகளின் விலையில் பெரிய அதிகரிப்பு பதிவாகவில்லை.
பச்சை மிளகாய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், போஞ்சி 100 ரூபாய்க்கும், கேரட் 140 ரூபாய்க்கும், வெண்டிக்காய் 150 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.