ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டின் முன்னாள் மற்றும் தற்போது பதவியில் உள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தமது வாக்குப்பதிவினை நிறைவேற்றி வருகின்றனர்.
கடற்றொழில் அமைச்சர்
இதற்கமைய, ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் வாக்களித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தவிசாளரும், நிதி செயலாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பினை மேற்கொண்டுள்ளார்.
தலவாக்கலை வட்டகொட – மடக்கும்புர தெற்கு தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை காலை 08.30 மணிக்கு செலுத்தியுள்ளார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்றைய தினம் தன்னுடைய வாக்கினை கட்டப்பிராய் சனசமூக நிலையத்தில் காலை 10 மணியளவில் செலுத்தினார்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே, 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பினை மேற்கொண்டுள்ளார்.
நாவலப்பிட்டி – குருந்துவத்த எம்.எஸ்.அளுத்கமகே தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை காலை 09.00 மணிக்கு செலுத்தினார்.