உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோரை கைது செய்ய தீர்மானம் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
குறித்த மனு நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.
விசாரணைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், மனுதாரர்களை கைது செய்வது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவர்களைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்தால், அத்தகைய முடிவை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கும் பிரேரணை தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.