இந்த வருடம் நடத்தப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்பட மாட்டாது என ரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த பரீட்சை வினாத்தாளின் சில கேள்விகள் கசிந்தமை தொடர்பில் ஆராய்ந்த குழுவொன்று மீண்டும் பரீட்சையை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று பரிந்துரைத்துள்ளதாகவும் எனவே கசிந்ததாக நம்பப்படும் மூன்று கேள்விகளுக்கான முழு மதிப்பெண்கள் அனைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வினாத்தாளின் 8 கேள்விகள் கசிந்துள்ளதால் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று சில மாணவர்களின் பெற்றோர்கள் முன்னர் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இந்த கோரிக்கை தொடர்பில் பெற்றோர்கள் தேவையான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.
இந்த வருடம் நடத்தப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.