டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக உடல்நிலை மோசமான நிலையில், இன்று மரணமடைந்துள்ளார்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா தமது 86வது வயதில் மரணமடைந்துள்ளார். புத்திசாலித்தனம், தொலைநோக்கு பார்வை மற்றும் பணி நெறிமுறைகளுக்கு பெயர் பெற்ற ரத்தன் டாடா, தனது குடும்ப வணிகத்தை சர்வதேச சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார்.
இவரது பதவிக் காலத்தில், டாட்டா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 2011 முதல் 2012-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 100 பில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டது.
புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் 1937ல் பிறந்த ரத்தன் டாடா, 10 வயதில் தனது பெற்றோரை பிரிந்து பாட்டியால் வளர்க்கப்பட்டார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் பட்டம் பெற்றார்.
அத்துடன் ஹார்வர்ட் அட்வான்ஸ்டு மேனேஜ்மென்ட்-இல் பட்டம் பெற்றிருந்தாலும், ரத்தன் டாடா IBM வேலை வாய்ப்பை நிராகரித்தார். 1962 முதல் டாட்டா குழுமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரிந்தார்.
இறுதியில் 1971ல் நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு இயக்குநரானார். 1991ல் ஜேஆர்டி டாட்டாவிடம் இருந்து டாடா சன்ஸ் தலைவராகவும், டாட்டா அறக்கட்டளையின் தலைவராகவும் ரத்தன் டாட்டா பொறுப்பேற்றார்.
இவருடைய நிர்வாகத்தின் கீழ் டாட்டா குழுமம் பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியது. ரத்தன் டாடாவின் புத்திசாலித்தனமான தலைமையின் கீழ் டாடா குழுமம் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தத் தொடங்கியது.
சுமார் 100 நாடுகளுக்கும் மேல் விரிவடைந்தது. இதனால் இந்திய தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் ஏற்பட்டது. 2008ல், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் பெற்றார். அவர் 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றார்.