பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமாக மூன்று நாள் செயலமர்வு!

tubetamil
0

 பத்தாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு  எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு இடம்பெறும் இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் வைத்திய கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, நா்ாளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மூன்று நாள் செயலமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நாடாளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், நாடாளுமன்ற குழு முறைமை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் நாடாளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அந்தந்தப் பிரிவுகளின் மூலம் நாடாளுமன்றச் செயற்பாடுகளில் உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் பணிகள் தொடர்பில் உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top