ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பில் போலியான தகவல்களைப் பரப்பியமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதுடன் சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சட்டத்தரணி சுனில் வதகல செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (06) கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தது.
அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உடல்நிலை குறித்த போலியான தகவல் சுபாஷ் என்ற நபரினது கணக்கின் ஊடாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.