மருத்துவர்களுக்கு வரிச்சலுகை வழங்குவது தொடர்பில் அவசரமாக ஆராயுமாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ( Nalinda Jayatissa) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகளை அமைச்சர் நேற்று (23) சந்தித்த போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான இந்த சந்திப்பில், தமது செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று சுகாதாரத்துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப் பேச்சாளர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.
மருத்துவர்களின் நிதிச் சிக்கல்களை மேம்படுத்த குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டங்களை அமைப்பது இதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சாதகமாக பதிலளித்த சுகாதார அமைச்சர், உடனடி தீர்வு காணக்கூடிய விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினூடாக நிவாரணங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக மருத்துவர் விஜேசிங்க கூறியுள்ளார்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியிருப்பதால், பணம் செலுத்தும் வரித் திட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அவர்கள் தற்போது ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.