மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உப்போடை வயல் பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (07) மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த நபர் சம்பவதினத்தன்று மாலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த போது, அந்த பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உயிரிழந்தவரின் சடலத்தை நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.