கொழும்பு ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் பி.எம்.டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் பின்னர் மீளப்பெறப்பபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து ,மேலும் தெரிய வருவதாவது, இந்த மனு இன்று முகமது லஃபார் தாஹிர் மற்றும் பி. குமாரன் ரத்னம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரருக்கு நீதவான் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளதால் இந்த மனுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த மனுவை மீளப்பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் கோரிக்கையை ஏற்று மனுவை மீள பெற அனுமதித்து தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.