மாத்தளை - இரத்தோட்டை, நாகுலியத்த பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாகுலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆயிரம் ரூபா பெறுமதியான வாழைக்குலையை திருடிய சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாழைக்குலையை திருடியதாக சந்தேகிக்கப்படும் அயல் வீட்டவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.