தமிழக கடற்றொழிலாளர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் நேற்று நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி இராமேஸ்வரம் துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட படகுகள் பணிகளுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, இயந்திர மயமாக்கப்பட்ட விசைப்படகு கடற்றொழிலாளர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில், பணி நிறுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, நேற்று கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்று அவர்கள் முடிவு செய்தனர்.
அண்மையில், தமிழக கடற்றொழிலாளர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், இலங்கை கடற்படையினரின் அநீதியான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சங்கங்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.