யாழ் மாவட்டம் காரைநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான கசூரினா கடற்கரையில் நீராடிய ஆறு பேர் விஷப்பாசி தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைநகர் கசூரினா கடற்கரை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று (26) கடலில் நீராடிய ஆறு பேர் திடீரென உடல்நலக் குறைபாடுகளுக்கு உள்ளாகினர். விசாரணையில் அவர்கள் விஷப்பாசி தாக்கத்தால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காரைநகர் பிரதேச சபை செயலாளர் கருத்து வெளியிடுகையில் ஆறு பேர் விசப்பாசி தாக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதை அவர் உறுதி செய்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காரைநகர் பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் கொடுத்ததாகவும், விஷப்பாசியை ஒழிப்பதற்கு தேவையான வினாகிரி வாங்கி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் இவ்வாறான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், இன்று தான் திடீரென இந்த விஷப்பாசி தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.