அநுராதபுரம் தலாவ பகுதியில் நடைபெற்ற தாய் தனது 2 வயது மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அநுராதபுரம் பிந்துன்கட, ஹிதோகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒரு தாய் ஒருவரே தனது 2 வயது மகளைக் கொலை செய்துவிட்டு, தானும் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இறந்தவர் தலாவ பிந்துன்கட பகுதியில் உள்ள நுண் கடன் வழங்கும் சங்கத்தின் பொருளாளராக பணிபுரிந்து வந்தார். பணம் குறைபாடு தொடர்பாக சங்க உறுப்பினர்கள் அவரைக் குற்றம் சாட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், பணப் பிரச்சனை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான பெண், தனது குழந்தையையும் தன்னையும் கொன்றுவிட முடிவு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில், பொலிசார் விசாரணையை தொடங்கினர். உயிரிழந்த தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.