விரைவில் ஆனையிரவு உப்பு என்ற பெயருடன் உப்பளத்தின் உப்பை பெற்றுக் கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று (14.05.2025) பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆனையிறவு உப்பளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை அடுத்து அங்கு விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ ஆனையிறவு உப்பளத்தில் இதுவரையில் உப்பு உற்பத்தியினை முழுமையாக செய்யப்படவில்லை. தற்பொழுது உப்பு உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக இதற்கான உதிரி பாகங்கள் இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு தற்பொழுது கொழும்பை வந்தடைந்துள்ளன.
ஓரிரு தினங்களில் உப்பளத்தின் உப்பு உற்பத்தி மீண்டும் செயல்பட ஆரம்பித்த பின்னர் நியாயமான விலையில் ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உப்பளத்தின் உப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது நியாயமானது. அவர்களுக்கான அடிப்படை உரிமை.
போக்குவரத்து வசதி என்பவற்றை உப்பு உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக பணியாளர்களுக்கான அனைத்து நன்மைகளும் வரப்பிரசாதங்களும் பெற்றுக் கொடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.