இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) ஏற்பாட்டில் இன்றையதினம் சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில், முன்னாள் போராளியான ஜெயசீலன் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார்.
அதன்பின்னர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டா நிமிட அக் வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன், ஜெசிந்தன், ஆதவன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
யாழ் - வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் (15) நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் (TNPF) முன்னெடுக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது.
இந் நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K. Shivajilingam) மற்றும் செ.கஜேந்திரன் (S. Kajendren) , சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் முகமாக மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில் நினைவேந்தலின் ஒரு அம்சமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13) யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தரப்பினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் நெல்லியடி பேருந்து நிலையத்தில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டதுடன் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தப்பட்டது.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் - கைதடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) கலந்துகொண்டார்.
மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர்.
இதேவேளை மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.