உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலை அமைத்து சட்டவிரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
இதனை அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாது விட்டால் தேவையற்ற விளைவுகளை கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று ஏற்படுவதற்கு வழியேற்படுத்தும் ஞா.சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், உகந்தை மலையில் முருகன் ஆலயம் அமைக்கும் விடயத்தில் வன இலாகாவினர் தடைகளை விதித்திருந்தார்கள். ஆனால் புத்தர் சிலை வைக்கின்ற விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.
இது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த உகந்தை மலையில் ஒரு புத்தர் சிலையை நிறுவி இருக்கின்றார்கள்.
உண்மையில் நாங்கள் மதத்திற்கும் மரியாதை கொடுக்கின்றவர்கள். புத்த பகவானை பொறுத்த வரையில் அவர் உண்மையில் அமைதியாக மக்கள் வாழ வேண்டும், குழப்பங்கள் இருக்கக் கூடாது காருண்யம் பேணப்பட வேண்டும் எந்த இடத்திலும் குழப்பங்கள் கலவரங்கள் சண்டைகள் தனது பெயரால் இடம்பெறக்கூடாது என விரும்புவோர்.
இவ்வாறு இருக்கத்தக்கதாக உகந்தை மலையில் முருகன் ஆலயத்திற்கு பக்கமாக இப்போது சட்டவிரோதமாக ஒரு புத்தர் சிலையை அமைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக இப்போது அந்த இடத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
நாங்கள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிற ஒரு விடயம் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
சகல மக்களையும் சமத்துவமாக சமதர்மம் வழிநடத்த வேண்டும் என்கிற உங்களுடைய வார்த்தைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்ற வேளையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு கலாசார ரீதியான பண்பாட்டு ரீதியான ஒரு ஆக்கிரமிப்பை அல்லது முருகன் ஆலயத்திற்கு பக்கத்தில் இன்னும் ஒரு சிலையை நிறுவுவதன் மூலமாக நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தாமல் இவ்வாறான சட்ட விரோதமான செயற்பாடுகளை தடுக்க வேண்டும்.
குறிப்பாக சொல்லப்போனால் வன வள திணைக்களமானது இந்த விடயத்தில் அக்கறை இன்றி இருக்கிறது. அல்லது அனுமதி கொடுத்து இருக்கின்றது என்று சொல்ல வேண்டும்.