நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிராக தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் வழக்கை, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்திற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டப்பட்ட இந்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது பிரதிவாதியால் கோரப்பட்ட சில ஆவணங்கள் இன்று திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சில ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதேநேரம் பிரதிவாதிகள் கோரும் வேறு சில ஆவணங்களும் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
இதன்போது பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், அனைத்து ஆவணங்களையும் வழங்கிய பின்னர் பிரதிவாதிகளின் நிலைப்பாடு மன்றில் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றில் தெரிவித்தார்.