இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியான ஷாடிகா லக்ஷானி என்பவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (04) உத்தரவிட்டிருந்தது.
இதன்போது “பெக்கோ சமனின்” மனைவி தனது 02 வயது மகளை தனது பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
“பெக்கோ சமனின்” மனைவியின் கோரிக்கைக்கு இணங்க 02 வயது மகளை “பெக்கோ சமனின்” மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த' , 'பாணந்துறை நிலங்க' மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
