மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம கடற்றொழிலாளர்கள், தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கப்படும் ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும்.
குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக' சிவப்பு நண்டு' என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இந்த நண்டுகள் கடற்றொழிலாளர்களின் வலைகளில் பாரியளவில் சிக்குவதால் கடற்றொழிலாளர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்
கடந்த 15 வருடங்களுக்கு முன் குறித்த சிவப்பு நண்டு, இப்பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு இவ்வாறு வருகை தருவதாகவும் இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர்.

