அம்பாறை நிந்தவூர் பகுதியில் நகைகள் திருடப்பட்டதாக பொய் கூறி, பொலிஸாரை ஏமாற்றிய குடும்பப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 27 ஆம் தேதி, 32 வயதுடைய அந்தப் பெண் தனது வீட்டில் 45 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் களவாடப்பட்டன என நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அவர் தனது கணவர் வெளிநாட்டிலிருந்து விரைவில் திரும்பவிருப்பதாகவும், அந்த நேரத்தில் தான் இந்த “திருட்டு சம்பவம்” நிகழ்ந்ததாகவும் தெரிவித்தார்.
திருட்டு சம்பவம் உண்மையல்ல
ஆனால், தடயவியல் பொலிஸாரின் தீவிர விசாரணையில் திருட்டு சம்பவம் உண்மையல்ல என்பது வெளிச்சம் கண்டது.
கணவன் வெளிநாட்டில் இருக்கும் காலத்தில், பெண் தன் கையிருப்பில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை பல்வேறு தேவைகளுக்காக செலவழித்திருந்தார். கணவன் திடீரென நாடு திரும்புவதாக அறிந்ததும், அச்சத்தால் அவர் நகைகள் திருடப்பட்டதாக நாடகம் அமைத்தார்.
மேலும், கல்முனை பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் அந்த நகைகளை விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பெண் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி முதலில் 14 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டபோதிலும், பின்னர் பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் கடும் எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
