13 வயது சிறுவன், 80,000 மக்கள் முன்னிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை சில நாடுகள் தடை செய்திருந்தாலும், ஒரு சில நாடுகளில் தற்போதும் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 80,000 பேர் முன்னிலையில் குற்றவாளி ஒருவருக்கு 13 வயது சிறுவனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தண்டனை நிறைவேற்றப்பட்ட மங்கள் என்ற நபர் 10 மாதங்களுக்கு முன்னர், 9 குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த 13 பேரை கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில், மங்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, கீழ்நிலை நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம்,தண்டனையை உறுதி செய்தது.
குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கும் வாய்ப்பை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கியதாகவும், ஆனால் மன்னிப்பு வழங்க குடும்பம் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு, தாலிபானின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்சாடா இந்த தண்டனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
தண்டனையை நிறைவேற்றிய 13 வயது சிறுவன்
நேற்று ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் உள்ள வெம்ப்லி விளையாட்டு மைதானத்தில் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை காண ஏராளமான மக்கள் மைதானத்தை நோக்கி விரைந்தனர். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுமார் 80,000 மக்கள் கூடியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், துப்பாக்கியால் 3 முறை குற்றவாளியை நோக்கி சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளார்.
துப்பாக்கியால் சுடப்படும் போது அங்கே கூடியிருந்த பார்வையாளர்கள் மத முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டில் தலிபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு நிறைவேற்றப்பட்ட 11வது மரண தண்டனை இதுவாகும்.
இந்த தண்டனை, "மனிதாபிமானமற்றது, கொடூரமானது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தான் சிறப்பு அறிக்கையாளர் ரிச்சர்ட் பென்னட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
