சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை!

Editor
0

 சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று (24) மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் 7 மாதங்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார்.


பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி 7 மாத கர்ப்பமானார்.


இந்த அதிர்ச்சித் தகவல் வெளியே தெரிந்ததையடுத்து,


கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நான்குநேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர்.


இந்த வழக்குத் தொடரப்பட்ட போது, நான்குநேரி பகுதி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டாக்டர் பிரசன்ன குமார் (தற்போது திருநெல்வேலி மாநகர துணை ஆணையாளர்) தலைமையிலான குழுவினர் வழக்கை மிகத் தீவிரமாக முன்னெடுத்தனர்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சிலம்பரசன் வழிகாட்டுதலின்படி, நான்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் குறுகிய காலத்திலேயே ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.


திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி, பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வலுவான வாதங்களை முன்வைத்தார்.


7 மாத கால தொடர் விசாரணைக்குப் பிறகு இன்று (24) மதியம் 12 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெற்ற மகளைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றம். இது ஒரு மிகப்பெரிய சமூகக் கொடூரம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது


தண்டனை விபரங்கள்:


1. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை (மரண தண்டனை) விதிக்கப்பட்டது.


2. குற்றவாளிக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.


3. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


குற்றம் நடந்த 7 மாதங்களுக்குள்ளேயே குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறை அதிகாரிகளுக்கும், அரசு வழக்கறிஞருக்கும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இத்தீர்ப்பு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு பெரும் எச்சரிக்கையாக அமையும் என்று கருதப்படுகிறது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top