கிளிநொச்சியில் பாடசாலை அதிபரின் ஊழலுக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Editor
0

 கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி மாசார் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர் பாடசாலையில் செய்துவரும் ஊழலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் அமைதி வழியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றைய தினம் (17.12.2025) இடம்பெற்றது.


பாடசாலை அதிபரின் முறையற்ற செயற்பாடுகள், பாடசாலை சமூகத்தினை புறக்கணித்து தன்னிச்சையாக முடிவெடுத்தல் மற்றும் பாடசாலை கணக்கறிக்கைகளின் முறைகேடு, பாடசாலைக்கு மக்கள் செய்யும் நன்கொடைகளில் ஊழல் மற்றும் சொந்த பகைமையை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை புறக்கணித்தல் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி குறித்த அமைதி வழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


எந்தவிதமான தீர்வும் 

இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் அதிபருக்கு எதிரான பதாதைகளை ஏந்தி மிகவும் அமைதி வழியாக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததோடு, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இதற்கான முடிவு கிடைக்கவில்லை என்றால் பாடசாலையினை முடக்கி ஆர்ப்பாட்டத்தை செய்வோம் என பாடசாலை சமூகத்தால் கூறப்பட்டுள்ளது.



இந்த முறைகேடுகள் தொடர்பாக பளை கோட்டக்கல்வி பணிமனை மற்றும் வலயம் மாகாணக்கல்வி திணைக்களம் போன்றவற்றிற்கு முறைப்பாட்டுக் கடிதங்களை வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் , பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இது சம்பந்தமாக எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பாடசாலை சமூகம் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்பாடுகளில் தற்போது ஆளும் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது எனவும், அதனை உடனடியாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு உடனடி தீர்வு எடுக்க வேண்டும் என பாடசாலை சமூகத்தால் கூறப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள்,  இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top