கிளிநொச்சியில் கடும் நிபந்தனைகளுடன் பிரதேச சபை உறுப்பினருக்கு பிணை!

Editor
0

கிளிநொச்சி - மகிழங்காடு பகுதியில், விவசாயி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய கரைச்சி பிரதேச சபை உறுப்பினரை எச்சரித்து, கடும் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. 


கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று (18-12-2025) இந்த உத்தரவை விடுவித்துள்ளது.


யுத்த சூழ்நிலைகளால் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் தங்கியிருந்து மீளவும் நாடு திரும்பிய குறித்த விவசாயி, தனது காணியில் பெரும்போக பயிர்செய்கை மேற்கொண்டுள்ளார். 


இந்நிலையில், விவசாயி தனது காணியில், கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை கரைச்சி பிரதேச சபை உறுப்பினரால் மண்வெட்டியால் தாக்குதல் மேற்கொள்ளட்டுள்ளது. 

பொலிஸில் முறைப்பாடு 

இதனை தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் விவசாயி அனுமதிக்கப்பட்டதுடன், பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு முறைப்பாடு செய்யப்பட்டது.  

அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் அன்றைய தினம் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அரசியல் தலையீடு மற்றும் மணல் மாபியாக்களின் தலையீடு காரணமாக குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காது அசமந்த போக்கை காட்டி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் ஆகியோருக்கு முறைப்பாட்டை அளித்துள்ளார். 

இந்நிலையில் எழுபது நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் இரவு (17-12-2025) குறித்த சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருந்து உடனடியாகவே அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, அவர் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வழக்கு நிறைவுறும் வரையும் சாட்சிகளுக்கோ அல்லது முறைப்பாட்டாளருக்கோ அச்சுறுத்தல் எதனையும் விடுக்க கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளார். 

மேலும், மாதத்தில் ஞயிற்றுக்கிழமையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளில் செல்லுமாறு கட்டளையிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்கு வழக்கு தவனையிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top